Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழ்நாட்டில் GCC மையங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை நிறுவவும் விரிவுபடுத்தவும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனம் மற்றும் ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த GCC மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலை பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட GCC காரிடார் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

மேலும், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனம், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்துள்ளது.

இதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் GCC துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடுகள் மற்றும் உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்