Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அசோக் லேலண்ட் மற்றும் ஃபினோலெக்ஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த காட்சி
இலண்டனில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த அசோக் லேலண்ட் மற்றும் ஃபினோலெக்ஸ் நிறுவன நிர்வாகிகள்.

இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026), அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பில், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து திரு. தீரஜ் ஹிந்துஜா அவர்கள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களிடம் விளக்கினார்.

மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, திருமதி நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India, London மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்