
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி அவர்கள் இன்று (09.08.2026) சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற “திறன் 2026” பயிலரங்கத்தை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆசியுடனும், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ழகரம் அறக்கட்டளை, சர்வதேச பயன்பாட்டு தமிழ் குழு மற்றும் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து “திறன் 2026” பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய லயோலா மணி, “தமிழால் முடியும்” என்பதை செயல்படுத்திக் காட்டும் களமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
தமிழில் மருத்துவப் பாடநூல்கள் மொழிபெயர்ப்பு
தெற்காசிய மொழிகளில் தமிழில் மட்டுமே கைட்டன் மற்றும் ஹால் மருத்துவ உடற்செயலியல் (Guyton and Hall Physiology) பாடநூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த முக்கியமான மொழிபெயர்ப்புப் பணியை டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான 37 மருத்துவர்கள் கொண்ட குழு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்காக மேற்கொண்டதாகவும், அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்ததாகவும் லயோலா மணி கூறினார்.
மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்காக நுண்ணுயிரியல் பாடநூலை மீளாய்வு செய்த டாக்டர் இளவஞ்சி, காது, மூக்கு, தொண்டை பாடநூல்களை மொழிபெயர்த்த டாக்டர் செந்தில் வடிவு, அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கோ. ஹரிஹரன் மற்றும் மணவை முஸ்தபாவின் மகன் டாக்டர் செம்மல் ஆகியோருக்கும் லயோலா மணி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.