Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சுதந்திரத் திருநாளையொட்டி மக்களுக்கு நல்வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
சுதந்திரத் திருநாளையொட்டி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரத் திருநாளையொட்டி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டிற்கு தனித்துவமான மற்றும் மகத்தான இடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் தமிழ் மண்ணிலிருந்து வலிமை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் வீரத்தையும் தேசப்பற்றையும் விதைத்த தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்த சுதந்திரத் திருநாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்