
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, இன்று (29.07.2026) சென்னை கலைவாணர் அரங்கில் நீர்வளத்துறையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், நீர்நிலைகள் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். புஸ்ஸி ஆனந்த், எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகள் சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கும் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.