
தமிழ்நாடு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்து செய்தியில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றும் வகையில் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுகூர்ந்தார்.
மேலும், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1 மற்றும் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் “தமிழ்நாடு” என்ற பெயரை சூட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய ஜூலை 18 ஆகிய இரு நாட்களையும் மாநில அரசு கொண்டாடும் என தெரிவித்துள்ளார்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமான தமிழ்நாடு, சமத்துவம், சமூகநீதி, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் திறன்மிக்க மனிதவளத்தில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக மேலும் வளர அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, தமிழின் இனிமை, தமிழரின் உயரிய பண்பாடு மற்றும் மனிதநேய மரபு தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு உருவாக பாடுபட்ட தியாகிகளை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்குவோம் என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.