Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னையில் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் அமைச்சர் K.G. அருண்ராஜ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, இன்று (04.08.2026) சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், மழைக்கால தொற்றுநோய்கள் தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பான பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த், MLA கலந்து கொண்டு, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

கூட்டத்தில், தெருக்கள் மற்றும் வடிகால்களில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பது, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துவது, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் Fogging பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கழிவுநீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்தல், குடிநீரில் குளோரின் அளவை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்தல் ஆகியவற்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

காய்ச்சல் பாதிப்புகளை விரைந்து கண்டறிய அறிவுறுத்தல்

காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மழைக்கால நோய்கள் தொடர்பான சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மின்கம்பிகள், மரக்கிளைகள் மற்றும் சாலைப் பள்ளங்கள்

பருவமழையின்போது மின்சாரக் கம்பிகள் அறுந்து விழும் சூழல் ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை சீரமைக்கவும், மரக்கிளைகள் விழும் அபாயம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக அவற்றை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனுக்குடன் சீரமைப்பதுடன், அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளையும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

#bussyanand #CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்