
2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 Saint Louis Rapid & Blitz போட்டியில் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் ஒரு சுற்று மீதமிருந்தபோதே பட்டத்தை உறுதி செய்ததாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி சாதனை படைத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
சர்வதேச செஸ் அரங்கில் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் பிரக்ஞானந்தா, தனது திறமையால் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரக்ஞானந்தா போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருவதாகவும், ELITE திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
செயின்ட் லூயிஸ் தொடரில் பிரக்ஞானந்தா ரேபிட் பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு 18 புள்ளிகளில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்திருந்தார். பின்னர் பிளிட்ஸ் பிரிவிலும் முன்னிலை வகித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.