
திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்டு மாதிரி உணவு விற்பனைக் கடைகளை தொடங்கி வைத்ததுடன், ஐந்து பயனாளிகளுக்கு உணவு விற்பனை வண்டிகளையும் வழங்கினார்.
மேலும், பயிற்சியை நிறைவு செய்த சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் உறுதிமொழியும் ஏற்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அருண் ராஜ், தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கும் தெருவோர உணவுக் கடைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். வீட்டில் சமைப்பதைப் போலவே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு தயாரித்து வழங்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட நிறமிகள் மற்றும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.